சூரம்பட்டிவலசு மாரியம்மன் கோவில் திருவிழா: கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு


சூரம்பட்டிவலசு மாரியம்மன் கோவில் திருவிழா: கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு
x

ஈரோடு சூரம்பட்டிவலசு சுயம்பு மாரியம்மன் கோவிலில் நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர்.

ஈரோடு


ஈரோடு சூரம்பட்டிவலசு சுயம்பு மாரியம்மன் கோவிலில் நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர்.

திருவிழா

ஈரோடு சூரம்பட்டி வலசில் பிரசித்தி பெற்ற சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகிறார்கள்.

கோவிலில் நேற்று முன்தினம் இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவிலின் பூசாரி கம்பத்தை தோளில் சுமந்தபடி ஊர்வலமாக நடனமாடி வந்தனர். அப்போது பக்தர்கள் சுற்றிலும் நின்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து கோவிலின் முன்பு கம்பம் நடப்பட்டது.

புனிதநீர் ஊற்றி வழிபாடு

தினமும் கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வருகிறார்கள். நேற்று காலையிலும் பெண் பக்தர்கள் கம்பத்துக்கு மஞ்சள் நீர், பால் உள்ளிட்டவற்றை ஊற்றி அம்மனை வழிபட்டனர். விழாவையெட்டி சுயம்பு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று (திங்கட்கிழமை) பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா 4-ந் தேதி நடக்கிறது. தொடர்ந்து மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 5-ந் தேதி கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


Next Story