கோபி பாரியூரில் 2 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் விழா கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்; இன்று தேரோட்டம் நடக்கிறது


கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்த குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்த குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பாரியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. காளியம்மன் என்ற பெயரில் சிறப்பு பெற்று விளங்கும் இந்த கோவிலின் குண்டம் திருவிழா மற்றும் தேர் திருவிழா ஆண்டுதோறும் மார்கழி மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

விறகுகள் காணிக்கை

அதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. தேர் நிலை பெயரும் நிகழ்ச்சி 6-ந் தேதி நடைபெற்றது. 9-ந் தேதி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 11-ந் தேதி மா விளக்கு பூஜை மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

காளியம்மன் பூத வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவில் முக்கிய நிகழ்வான குண்டம் விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 11-ந் தேதி இரவு குண்டம் அமைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் (எரி கரும்புகள்) விறகுகளை காணிக்கையாக குவித்திருந்தனர்.

வரம் கேட்கும் நிகழ்ச்சி

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய இந்த எரி கரும்புகள் கோவிலின் முன்பு குவிக்கப்பட்டது. இதையடுத்து எரிகரும்புகள் எரிப்பதற்கு தயார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு குண்டம் பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 10 மணி அளவில் காளியம்மன் அனுமதி பெற்று குண்டம் பற்றவைக்கப்பட்டது

விறகுகள் கொழுந்து விட்டு எரிந்து தீ தனலாக மாறியது. இதற்கிடையே சாமியிடம் வாக்கு கேட்கும் நிகழ்ச்சியும், படைக்கலம் கொண்டுவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. நள்ளிரவு 1 மணிக்கு கோவிலில் இருந்து தலைமை பூசாரி ஆனந்தன் தலைமையில் பூசாரிகள், கோவிலின் முக்கிய நிர்வாகிகள், புதுக்கரை புதூர் தொட்டிபாளையம் பிரிவு பகுதிக்கு சாமி வரம் கேட்கும் நிகழ்ச்சிக்கு சென்றனர். அங்கு சாமி வரம் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான சிறப்பு பூஜைகள் அங்கு நடைபெற்றன.

மலர் அலங்காரம்

அதைத்தொடர்ந்து படைக்கலத்துடன் மேளதாளங்கள் முழங்க பூசாரிகள், நிர்வாகிகள், ஊர்வலமாக பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். அங்கிருந்து பூசாரிகள் கோவிலை சுற்றி வலம் வந்தனர். அவர்கள் கோவிலுக்குள் வந்ததும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் எரிகரும்புகள் முழுமையாக எரிந்து தீ தனல்களாக மாறி இருந்தன. குண்டம் 40 அடி நீளம், 3 அடி அகலம் கொண்டதாக பிரமாண்டமான தீ படுக்கையானது தயார் செய்யப்பட்டிருந்தது.

அதிகாலை 5 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட மலர் தேரில் காளியம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலில் உள்ளே தலைமை பூசாரிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

தலைமை பூசாரி

பின்னர் கோவிலின் உள்ளே இருந்து மண் கலயத்தில் எண்ணெய் எடுத்து வரப்பட்டது. தலைமை பூசாரி கையில் தீ பத்திரி பற்ற வைத்து எடுத்து வந்தார். மண் கலயம் தீபக்கம்பத்தில் பொருத்தப்பட்டு தீபத்திரியும் போடப்பட்டு கம்பத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், "அம்மா தாயே" என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். அதைக் கேட்டு குண்டம் இறங்குவதற்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் பக்திக்கோசம் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து குண்டம் இறங்குவதற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தலைமை பூசாரி ஆனந்தன் குண்டத்தில் நாலாபுறமும் பூக்களை சொரித்து பூஜை செய்தார். தீபாராதனையும் தொடர்ந்து நடைபெற்றது. தேங்காய் பூக்களை குண்டத்தில் சொரித்தார். 3 முறை செய்த பின்னர் கைகளால் தீ கனல்களை தூக்கி வீசிய அவர் குண்டத்தில் கால் வைத்து ஏறி மிதித்து நடந்து சென்றார். அவர் தீ படுக்கையில் நடந்தபடி கோவிலுக்குள் சென்றார்.

தீ மிதித்த பக்தர்கள்

அப்போது சுற்றி இருந்த பக்தர்கள், "அம்மா தாயே" என்று பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். அவரை தொடர்ந்து பிற பூசாரிகள், கோவில் பணியாளர்கள், குண்டம் வீரர்கள் மற்றும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்தார்கள். ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், முதியவர்கள் என வயது வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் குண்டம் இறங்கி கொண்டத்து காளியம்மனை வழிபட்டுச் சென்றனர்.

மேலும் குண்டத்தில் போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறையினர், முக்கிய பிரமுகர்கள் இறங்கினர். ஆண்கள், பெண்கள் தங்கள் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

குண்டம் இறங்குவதற்கு ஈரோடு மாவட்டமின்றி திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கோவிலில் வந்து குவிந்தனர். நேற்று காலை 5.40 மணி அளவில் குண்டம் தொடங்கி 10 மணி வரை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.

குண்டம் திருவிழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. குண்டம் இறங்கிவிட்டு வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க சமூக நல சங்கங்கள் சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது. விழாவையொட்டி கொண்டத்து காளியம்மன் சிம்ம வாகன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தேரோட்டம்

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தேர் நிலை சேருகிறது. இரவு முக்கிய நிகழ்வான மலர் பல்லக்கு நடைபெறுகிறது.

கோபி அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் முத்துரமணன் மலர் பல்லக்கிற்கான நன்கொடை வழங்கியுள்ளார். 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோபியில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 16-ந் தேதி முதல் 21-ந்தேதி தேதி வரை கோபி, புதுப்பாளையம், நஞ்ச கவுண்டம் பாளையம் பகுதிகளில் மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. 21-ந் தேதி அன்று நடக்கும் மறுபூஜையுடன் திருவிழாவானது நிறைவு பெறுகிறது.


Next Story