கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கடத்தூர்
கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கொண்டத்து காளி
கோபி அருகே உள்ள பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் குண்டம் விழா நடைபெறும். ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குவார்கள்.
இந்த ஆண்டுக்கான குண்டம் விழாவுக்கு கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டப்பட்டது. அன்று முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கின. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கடந்த 6-ந் தேதி தேர் நிலை பெயர்த்தல் நடைபெற்றது. 9-ந் தேதி அம்மனுக்கு சந்தனக்காப்பு செய்யப்பட்டது. 11-ந் தேதி பெண்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தார்கள்.
தேரோட்டம்
முக்கிய விழாவான குண்டம் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நேற்று மாலை 4 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது.
முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து அம்மன் தேரும் அசைந்தாடி சென்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தார்கள். அமரபணீஸ்வரர் கோவில் வரை இழுத்து அங்கே நிறுத்தினார்கள்.
முன்னதாக மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவகுமார் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் தேர் மீண்டும் இழுக்கப்பட்டு நிலை சேர்க்கப்படுகிறது.
தொடர்ந்து மலர் பல்லக்கு நிகழ்ச்சியும், நாளை தெப்போற்சவமும் நடைபெறுகிறது. 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. 21-ந் தேதி மறு பூஜை நடக்கிறது.