'கோவிந்தா, கோவிந்தா' என்று பக்தி கோஷம் முழங்க கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
'கோவிந்தா, கோவிந்தா' என்று பக்தி கோஷம் முழங்க ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
'கோவிந்தா, கோவிந்தா' என்று பக்தி கோஷம் முழங்க ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கஸ்தூரி அரங்கநாதர்
ஈரோடு கோட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. அனைத்து பணிகளும் முடிவடைந்து கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. 31-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, நித்யபடிபாராயணம், வாஸ்து சாந்தி ஆகிய நிகழ்ச்சி நடந்தது.
அன்று காலை 10.30 மணிக்கு கோபுரத்தில் கலசம் வைக்கப்பட்டு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 1-ந்தேதி காலை 7 மணிக்கு யாக சாலை பிரவேசம் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு முதல் கால பூஜையும், மாலை 5 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடத்தப்பட்டு சாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
கும்பாபிஷேகம்
நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு சுப்ரபாதம், திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சியும், காலை 9 மணிக்கு 3-ம் கால பூஜையும், இரவு 8 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு பரிவார யாகசாலை பூஜையும், 7 மணிக்கு 5-ம் கால பரிவார யாசாலை பூஜையும், கலசங்கள் புறப்பாடு நடந்தது. இதேபோல் கமலவள்ளி தாயார் யாக சாைலயிலும் சிறப்பு பூஜைகள் நடைெபற்றன.
பின்னர் காலை 7.30 மணிக்கு பரிவார ஆலய தெய்வங்களுக்கும், கோபுரங்களுக்கும் கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு பரிவார கோவில் தெய்வங்கள், பரிவார கோபுரங்கள் மற்றும் மூலவர் கஸ்தூரி அரங்கநாத பொருமாள், கமலவல்லி தாயார், மூலவர் ராஜகோபுரத்துக்கும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
'கோவிந்தா, கோவிந்தா'...
அப்போது கோவிலை சுற்றி நின்றிருந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா...' என்று பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையொட்டி கஸ்தூரி அரங்கநாத பெருமாள், கமலவல்லி தயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து செங்குந்தர் பள்ளிக்கூட மைதானத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு அரங்க அழகனுக்கும், அழகியார்க்கும் திருக்கல்யாணம் நடந்தது.