சென்னிமலையில் அய்யப்ப சாமி கோவில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சென்னிமலையில் உள்ள அய்யப்ப சாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சென்னிமலை
சென்னிமலையில் உள்ள அய்யப்ப சாமி கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தீர்த்தக்குட ஊர்வலம்
சென்னிமலையில் அய்யப்பா நகரில் உள்ளது அய்யப்ப சாமி கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவிலில் உள்ள விமானங்கள், கருவறை, மகா மண்டபம் ஆகியவை புனரமைக்கப்பட்டது.
இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இதற்கான கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மேலும் அன்று நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் அன்று கொடிவேரிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். பின்னர் தீர்த்தக்குடங்களுடன் சென்னிமலையில் உள்ள 4 ராஜ வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
யாக பூஜைகள்
அதன்பின்னர் அங்கு வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல்கால யாக பூஜை, தீபாராதனை காண்பித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் 2-ம் கால யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து வேதபாராயணம், திருமுறை பாராயணம், 3-ம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று காலையில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு மேல் 4-ம் கால யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. பின்னர் நாடி சந்தானம், மகா தீபாராதனை காண்பித்தல், கலசங்கள் கோவிலை சுற்றி வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகம்
அதனைத்தொடர்ந்து வலம்புரி பால விநாயகர், அய்யப்ப சாமி, பாலமுருகன் ஆலய விமானங்கள் மற்றும் மூலாலய மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முருகனடிமை சுப்புசாமி தலைமையில் அய்யப்ப சாமி கோவிலின் அர்ச்சகர் ஜி.மாணிக்கவாசக குருக்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமிக்கு அபிஷேகம் செய்தல், தசதானம், தசதரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.