சென்னிமலை அருகே வினோத விழா: வேம்பு-அரச மரத்துக்கு திருமணம்


சென்னிமலை அருகே வினோத விழா: வேம்பு-அரச மரத்துக்கு திருமணம்
x

சென்னிமலை அருகே வேம்பு-அரச மரத்துக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே வேம்பு-அரச மரத்துக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

வேம்பு-அரச மரம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள சாணார்பாளையம் கிராமத்தில் செல்வ விநாயகர் ேகாவில் இருக்கிறது. இந்த கோவில் பின்புறம் ஒன்றையொன்று ஒட்டியவாறு வேப்ப மரமும், அரச மரமும் வளர்ந்துள்ளது. அரச மரத்தை பரமசிவனாகவும், வேப்ப மரத்தை பார்வதியாகவும் ஊர் பொதுமக்கள் பாவித்து வணங்கி வருகிறார்கள்.

தாலி கட்டப்பட்டது

இந்த நிலையில் உலக அமைதிக்காகவும், ஊரில் திருமணம் ஆகாமல் உள்ள இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டியும் வேம்பு-அரச மரத்துக்கு திருமணம் செய்து விழா நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இதையொட்டி நேற்று முன்தினம் காலை விநாயகர் பூஜையுடன் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கின. வாஸ்து சாந்தி, மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் வேப்பமரத்துக்கு தாலி கட்டி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

மொய் பணம்

சிவியார்பாளையம் பரமசிவன் கோவில் அர்ச்சகர் பழனிசாமி திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த விழாவில் சாணார்பாளையம், புதுவலசு, அண்ணாமலைபாளையம், நல்லபாளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

திருமண விழாவுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் திருமண விருந்து நடைபெற்றது. மேலும் விழாவுக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் மொய் பணம் கொடுத்தனர்.

இளைஞர்களுக்கு திருமணம் நடக்க...

இதுகுறித்து சாணார்பாளையத்தை சேர்ந்த பழனிமுருகன் கோபால் என்பவர் கூறுகையில், 'பல ஊர்களில் ஏராளமான இளைஞர்கள் திருமண வயதை கடந்தும் மணப்பெண் கிடைக்காமல் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர். எனவே திருமணம் ஆகாமல் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் விரைவில் மணப்பெண் கிடைத்து நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற நோக்கத்திலும், உலக அமைதிக்காகவும் வேம்பு-அரச மரத்துக்கு திருமணம் செய்து வைத்தோம்' என்றார்.



Next Story