சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருக்கல்யாணம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. பின்னர் பல்லக்கு சேவை, மயில் வாகனக்காட்சி உள்பட முருகப்பெருமானின் பல்வேறு வாகனக்காட்சிகள் தினமும் இரவு நடைபெற்று வந்தது. மேலும் பல்வேறு சமூகத்தினரின் மண்டபக்கட்டளை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரவு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு அபிஷேகம் மற்றும் வசந்த திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றது.

தைப்பூச தேரோட்டம்

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு மேல் சாமிகளை சப்பரத்தில் எடுத்து தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு தேரை 3 முறை வலம் வந்து பின்னர் சாமிகளை தேரில் அமர வைக்கப்பட்டது. அங்கு தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கற்பூரம் காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து காலை 6.15 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தோப்பு வெங்கடாசலம்

மேலும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் பி.செங்கோட்டையன் (சென்னிமலை வடக்கு), சி.பிரபு (சென்னிமலை கிழக்கு), அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி, கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத்தலைவர் சவுந்தர்ராஜன், செயல் அலுவலர் ஆர்.பார்த்திபன், தி.மு.க. நகர செயலாளர் எஸ்.எம்.ராமசாமி, குமாரவலசு ஊராட்சி தலைவர் வி.பி.இளங்கோ, ஓட்டப்பாறை ஊராட்சி தலைவர் சுமதி தங்கவேல், துணைத்தலைவர் மன்னர் மன்னன், தி.மு.க. நிர்வாகிகள் கொடுமணல் கோபால், சதீஸ் என்கிற சுப்பிரமணியம் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா" கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காலை 6.40 மணி அளவில் தெற்கு ராஜ வீதி சந்திப்பில் தேர் நிறுத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு மலை அடிவாரத்தில் தைப்பூச இசைவிழாக்குழு மற்றும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாக்கோலம்

தேர்த்திருவிழாவை முன்னிட்டு சென்னிமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மேள, தாளங்கள் முழங்க காவடிகள் எடுத்து சென்னிமலைக்கு வந்தனர். மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்கிறது. வருகிற 9-ந் தேதி இரவு மகா தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.


Next Story