ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ஈரோடு
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பெரிய மாரியம்மன் கோவில்
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களாக சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து கடந்த 25-ந்தேதி இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடப்பட்டது. இந்த கம்பங்களுக்கு தினந்தோறும் பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வருகிறார்கள்.
அக்னி சட்டி
இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று அதிகாலை 5 மணி முதல் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் புனிதநீர் ஊற்றுவதற்காக கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.
மேலும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களின் சார்பில் பெரியமாரியம்மன் வகையறா கோவில்களுக்கு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். ஒருசில பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி
நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு, காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
அதைத்தொடர்ந்து அன்று இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள். நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வடம் பிடித்தலும், வருகிற 8-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ந்தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.