பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்ற குவிந்த பெண்கள்; இன்று மஞ்சள் நீராட்டு விழா


பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்ற குவிந்த பெண்கள்; இன்று மஞ்சள் நீராட்டு விழா
x

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றுவதற்காக பெண்கள் குவிந்தனர். இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

ஈரோடு

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றுவதற்காக பெண்கள் குவிந்தனர். இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

பெரிய மாரியம்மன்

ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலின் திருவிழா நடந்து வருகிறது. இந்த கோவிலிலும், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய வகையறா கோவில்களிலும் நடப்பட்ட கம்பத்துக்கு தினமும் பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள். கடந்த 4-ந் தேதி காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், 5-ந் தேதி சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடந்தது. சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய தேரோட்டம் பல்வேறு வீதிகள் வழியாக சென்று நேற்று மாலையில் கோவிலில் தேர் நிலை வந்தடைந்தது.

இந்தநிலையில் நேற்று கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றுவதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள், கம்பத்துக்கு புனிதநீர், பால் ஊற்றி அம்மனை வழிபட்டனர். இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களிலும் கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றினார்கள். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், கம்பங்கூழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

மஞ்சள் நீராட்டு விழா

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி 3 கோவில்களிலும் நடப்பட்ட கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இதில் பக்தர்கள் ஒருவர் மீது மற்றொருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் இருந்த பிடுங்கப்படும் கம்பங்கள் மணிக்கூண்டு பகுதிக்கு எடுத்து வரப்படும். அங்கிருந்து ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகளில் கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் நின்று கம்பங்களின் மீது உப்பு, மிளகு வீசுவார்கள். அதன்பிறகு கம்பங்கள் காலிங்கராயன் வாய்க்காலில் விடப்படும்.

விழாவையொட்டி ஈரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


Next Story