பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா: கம்பம் ஊர்வலத்தால் 'களை' கட்டிய ஈரோடு- மஞ்சள் நீராடி மகிழ்ந்த பக்தர்கள்


பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி நேற்று கம்பம் ஊர்வலம் நடந்தது. இதனால் ஈரோடு மாநகரம் ‘களை’ கட்டி காணப்பட்டது. மேலும் பக்தர்கள் மஞ்சள் நீராடி மகிழ்ந்தனர்.

ஈரோடு

பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி நேற்று கம்பம் ஊர்வலம் நடந்தது. இதனால் ஈரோடு மாநகரம் 'களை' கட்டி காணப்பட்டது. மேலும் பக்தர்கள் மஞ்சள் நீராடி மகிழ்ந்தனர்.

திருவிழா

ஈரோடு மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிலும், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய வகையறா கோவில்களிலும் குண்டம் தேர்த்திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வந்தனர்.

25-ந் தேதி இரவில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பம் நடப்பட்டது. 30-ந் தேதி மாலையில் கொடியேற்றப்பட்டது. கடந்த 4-ந் தேதி காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், 5-ந் தேதி பொங்கல் விழாவும் நடைபெற்றது. அன்றைய தினம் சின்ன மாரியம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

புனித நீர்

திருவிழாவையொட்டி மாரியம்மன் கோவில்களில் நடப்பட்ட கம்பத்துக்கு தினமும் பெண்கள் புனிதநீர், பால் ஊற்றியும், வேப்பிலை, மலர் வைத்தும் வழிபட்டனர். பெரிய மாரியம்மன் கோவிலில் நள்ளிரவிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றியதை காண முடிந்தது.

திருவிழாவின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் கம்பத்துக்கு இடைவிடாமல் புனிதநீர், பால் ஊற்றினார்கள். இதேபோல் நேற்று காலையிலும் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காக கோவிலில் குவிந்தனர்.

கம்பம் ஊர்வலம்

விழாவின் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியான கம்பம் ஊர்வலம் நேற்று நடந்தது. மதியம் 2.30 மணிஅளவில் கம்பம் பிடுங்குவதற்கான ஏற்பாடுகளில் பூசாரிகள் ஈடுபட்டனர். பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய 3 கோவில்களிலும் ஒரே நேரத்தில் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிடுங்கப்பட்டன. தொடர்ந்து அதில் இருந்த மலர், வேப்பிலை அகற்றப்பட்டு, மஞ்சள் பூசப்பட்டது. மீண்டும் கம்பத்தில் புதிதாக மலர், வேப்பிலை வைக்கப்பட்டு கம்பம் ஊர்வலம் தொடங்கியது.

பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து பிடுங்கப்பட்ட கம்பம் பக்தர்களின் புடைசூழ பன்னீர்செல்வம் பூங்கா வழியாக மணிக்கூண்டுக்கு சென்றது. இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் பிடுங்கப்பட்ட கம்பங்களையும் பூசாாிகள் தோளில் சுமந்து கொண்டு மணிக்கூண்டுக்கு வந்தனர். அங்கிருந்து 3 கம்பங்களுடன் ஊர்வலம் தொடங்கியது. அப்போது சுற்றிலும் நின்றிருந்த பக்தர்கள் ஆரவாரத்துடன் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

உப்பு-மிளகு வீசினர்

மணிக்கூண்டில் இருந்து ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக ஊர்வலம் சென்றது. வழிநெடுகிழும் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும், கம்பத்தை வரவேற்கும் விதமாக சாலைகளில் தண்ணீர் ஊற்றப்பட்டது. ஈஸ்வரன் கோவில் அருகில் வந்ததும் பூசாரிகள் கம்பத்தை தோளில் சுமந்தபடி நடனமாடினார்கள். தொடர்ந்து காமராஜர்வீதி வழியாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அருகில் கம்பங்களின் ஊர்வலம் வந்தது. அதன்பிறகு மீனாட்சி சுந்தரம் சாலை (பிரப்ரோடு) வழியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதிக்கு கம்பங்களின் ஊர்வலம் சென்றது.

அந்த சாலையில் ஏற்கனவே கம்பங்களை பார்வையிடுவதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்றனர். மேட்டூர்ரோட்டில் கம்பங்கள் ஊர்வலம் சென்றதை மேம்பாலத்தில் திரண்டு நின்றிருந்த பக்தர்கள் பார்வையிட்டனர். சுவஸ்திக் கார்னர், சத்திரோடு, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜிரோடு வழியாக மீண்டும் மணிக்கூண்டுக்கு ஊர்வலம் சென்றது. அங்கிருந்து பெரியார்வீதி வழியாக காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலை ஊர்வலம் சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்து கம்பங்கள் காலிங்கராயன் வாய்க்காலில் விடப்பட்டது.

ஊர்வலத்தின்போது சாலைகளின் இருபுறமும் திரண்டு இருந்த பக்தர்கள் கம்பத்தின் மீது உப்பு-மிளகு வீசினர். மாநகரில் எங்கு பார்த்தாலும் மேள, தாளம் முழங்கிய சத்தம் கேட்டபடி இருந்தது. ஆங்காங்கே பக்தர்கள் கடவுளின் வேடமணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றார்கள். பல பக்தர்கள் தங்களது உடலில் கருப்பு நிற வண்ணப்பொடியை பூசி கொண்டு வந்தனர்.

மஞ்சள் நீராட்டு விழா

கம்பம் ஊர்வலத்தையொட்டி மஞ்சள் நீராட்டு விழாவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நேற்று மதியம் 12 மணிஅளவில் இருந்தே பக்தர்கள் குதூகலத்துடன் விழாவை கொண்டாட தயாராகி விட்டனர். இதற்காக பல்வேறு இடங்களில் மஞ்சள் கலந்த நீரை பெரிய பாத்திரத்தில் தயாராக பக்தர்கள் ஊற்றி வைத்து கொண்டனர். ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்ந்தனர்.

அப்போது வீதியில் நடந்து சென்றவர்கள், சைக்கிள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மீதும் பக்தர்கள் மஞ்சள் நீரை ஊற்றினார்கள். மேலும் மஞ்சள் பொடியையும் மற்றவர்கள் மீது தூவி மகிழ்ந்தனர். இதனால் ஈரோட்டில் நேற்று வீதியில் சென்ற பெரும்பாலானவர்களின் முகங்களும், ஆடைகளும் மஞ்சள் நிறமாகவே காணப்பட்டது.

'களை' கட்டியது

கோட்டை பகுதி, காமராஜ் வீதி, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, மார்க்கெட் வீதி, எஸ்.கே.சி.ரோடு, மேட்டூர் ரோடு, முனிசிபல் காலனி, திரு.வி.க.ரோடு, சுவஸ்திக் கார்னர், சத்திரோடு, பெரியார் நகர், தில்லை நகர், முனியப்பன்கோவில் வீதி, சேட் காலனி, கச்சேரி வீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் நீராட்டு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், இளம்பெண்களும் மஞ்சள் நீராடியும், நடனமாடியும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். மஞ்சள் பொடியை முகம் முழுவதும் பூசியும், மஞ்சள் பொட்டு வைத்தும் கொண்டாடினர். இதனால் வீதிகள் மஞ்சள் நீர் வீதிகளாக மாறின. இதனால் ஈரோடு மாநகரமே 'களை' கட்டி காணப்பட்டது.

திருவிழாவையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலம் செல்லும் பகுதியில் குறிப்பிட்ட நேரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் நேற்று மதியத்துக்கு மேல் மாநகரில் கடைகள் அடைக்கப்பட்டன.


Next Story