கும்பாபிஷேகத்தையொட்டி, காஞ்சிக்கோவில் கனககிரி வேலாயுதசாமி கோவிலில் யாக பூஜை
கும்பாபிஷேகத்தையொட்டி, காஞ்சிக்கோவில் கனககிரி வேலாயுதசாமி கோவிலில் யாக பூஜை
காஞ்சிக்கோவில் கனககிரி வேலாயுதசாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக பூஜை நடந்தது.
யாக பூஜை
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவிலில் பிரசித்தி பெற்ற கனககிரி வேலாயுதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி காசி, ராமேசுவரம், திருச்செந்தூர், தலைக்காவேரி, பவானி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து காஞ்சிக்கோவிலில் உள்ள நான்கு வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நேற்று காலை 8 மணிக்கு மகா கணபதி யாகமும், மாலை 4 மணிக்கு காஞ்சிக்கோவில் ஈசான சிவப்பிரகாச சிவாச்சாரியார் குருக்கள் தலைமையில் முதல் கால யாக பூஜையும் நடந்தது.
கும்பாபிஷேகம்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மூலமந்திர யாகம், திரவிய யாகம், விமான கலசம் வைத்தலும், மாலை 4 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, யாகத்தில் உள்ள அருள் சக்திகளை மூலாலயத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு சேர்ப்பித்தல் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.
அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு சர்வசித்தி கணபதி நிகழ்ச்சியை தொடர்ந்து, சிவகிரி ஆதீன குலகுரு தலைமையில், வேலாயுத சாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அபிஷேக பூஜை, தசதானம், தசதரிசனம், மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை காஞ்சிக்கோவில் ஸ்ரீகுமரன் மலை நலச்சங்கத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.