சிவன் கோவில்களில் குருபெயர்ச்சி யாகம்
சிவன்கோவில்களி் குருபெயர்ச்சி யாகம் நடந்தது.
குரு பெயர்ச்சி யாகம்
குரு பகவான் மீனம் ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு முத்தூர், நத்தக்காடையூர் பகுதி சிவன் கோவில்களில் குரு பெயர்ச்சி மகா யாக பூஜை நடைபெற்றது. அப்போது மழை பெய்ய வேண்டும், பொதுமக்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ வேண்டும். விவசாயம், தொழில், உத்தியோகம், செல்வம் அபிவிருத்தி பெற வேண்டும். திருமண தடை நீங்க வேண்டும். குழந்தை இல்லாத தம்பதிகள் விரைவில் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என வேண்டிக்கொள்ளப்பட்டது.
முத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியநாச்சியம்மன் உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற குரு பெயர்ச்சி மகா யாக பூஜையின் முதல் நிகழ்வாக நேற்று காலை 6 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கப்பட்டு காலை 6.30 மணிக்கு அக்னி குண்டத்தில் சிறப்பு குரு மகா யாக ஹோம பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 7 மணிக்கு குருபகவான், தட்சிணாமூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு பக்தர்கள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்களுக்கு பிரசாதங்கள், சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், சுண்டல் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சோழீஸ்வரர் கோவில் குரு வார வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
நத்தக்காடையூர்
நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற குரு பெயர்ச்சி மகா யாக பூஜையில் காலை 7 மணிக்கு சங்கல்பம் யாகம், மேதா தட்சிணாமூர்த்தி யாகம், நவக்கிரக ஹோமம் யாகம், 27 நட்சத்திர பரிகார யாகம் ஆகிய சிறப்பு மகா யாக பூஜைகள் நடைபெற்றது.
காலை 8 மணிக்கு தட்சிணாமூர்த்தி, குரு பகவான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தர்கள், சுற்று வட்டார நகர, கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.