சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா; திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்


சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர்.

தண்டு மாரியம்மன்

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் பிரசித்திபெற்ற தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி மாரியம்மனின் அக்காள் என்று தண்டு மாரியம்மனை பக்தர்கள் அழைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இந்த கோவிலில் குண்டம் விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 20-ந் தேதி கோவிலில் கம்பம் நடப்பட்டது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை நாள்தோறும் இரவு இளைஞர்கள் கம்பத்தை சுற்றி கம்பம் ஆட்டம் ஆடினர்.

முக்கிய நிகழ்வான குண்டம் விழா நேற்று நடந்தது. காலை 7 மணி அளவில் பூசாரிகளுடன் பக்தர்கள் பவானி ஆற்றுக்கு சென்று புனித நீராடினார்கள்.

தீ மிதித்தனர்...

அதன்பின்னர் கையில் வேப்பிலையுடன் ஆற்றில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு 10 அடி நீளத்தில் குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது. முதலில் பூசாரி கிருஷ்ணன் குண்டத்துக்கு மலர் தூவி சிறப்பு பூஜை செய்தார். பின்னர் கையில் தீபாராதனை தட்டை ஏந்தியபடி மணியை ஒலித்துக்கொண்டே குண்டம் இறங்கினார்.

அவரை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமிகள் என திரளான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.

இன்று (வியாழக்கிழமை) இரவு வாண வேடிக்கையுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக்கிழமை) திருவிளக்கு பூஜையும், நாளை மறுநாள் மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.


Next Story