சத்தியமங்கலம் அருகே கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் விழா; சாட்டையால் அடிவாங்கி பக்தர்கள் வினோத வழிபாடு
சத்தியமங்கலம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்த கம்பம் விழாவில் சாட்டையால் அடிவாங்கி பக்தர்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்த கம்பம் விழாவில் சாட்டையால் அடிவாங்கி பக்தர்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கம்பம் விழா
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறாவான கோட்டை முனியப்பன் கோவில் பவானி ஆற்றின் கரையில் உள்ளது. இந்த 2 கோவில்களுக்கும் ஆண்டுதோறும் கம்பம் விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கம்பம் விழா கடந்த மாதம் 28-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இரவு 9 மணி முதல் 12 மணி வரை கம்பத்தை சுற்றி கம்பம் ஆட்டம் ஆடிவந்தனர்.
பவானி ஆற்றுக்கு...
நேற்று முன்தினம் இரவு கோட்டை மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிப்பட்டனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவில் முன்பு நடப்பட்டு இருந்த வேல்களை பிடுங்கி கையில் எடுத்துக்கொண்டு பவானி ஆற்றுக்கு கொண்டு சென்றனர். அங்கு வேல்களை சுத்தம் செய்து, திருநீர், மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களையும் சூடி அலங்கரித்தனர்.
தொடர்ந்து குதிரை வாகனத்தில் உற்சவகோட்டை மாரியம்மன் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட சப்பர ஊர்வலம் புறப்பட்டது. இதில் பக்தர்கள் கையில் வேலுடன் சென்றனர். ஊர்வலம் அக்ரஹாரம், கடைவீதி, வன்னியர் வீதி, வடக்குப்பேட்டை, அத்தாணி ரோடு வழியாக மீண்டும் கோட்டை முனியப்பன் கோவிலை அடைந்தது.
சாட்டை அடி
அங்கு கோட்டை முனியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த வேல்களை கோவிலில் நட்டுவைத்தனர். ஊர்வலத்தின்போது சில இடங்களில் பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் நேர்த்திக்கடனாக சாட்டையால் 3 முறை அடிவாங்கிக்கொண்டு அம்மனை வணங்கி சென்றார்கள். இந்த வினோத வழிபாடு மூலம் விவசாயம், மழை, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நேற்று கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து கோட்டை மாரியம்மனுக்கு படைத்தனர். இரவு 8 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டு பவானி ஆற்றில் விடப்பட்டது. நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், வருகிற 11-ந்தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.