ஆனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


ஆனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
திருப்பூர்


கஸ்பா-பழையகோட்டை ஆனூர் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

ஆனூர் அம்மன் கோவில்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் அருகே கஸ்பா-பழையகோட்டை கிராமத்தில் உள்ள ஆனூர் அம்மன் கோவில் ராஜகோபுரம், விமானம், கருவறை வர்ணம் பூசி புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கு பழையகோட்டை பட்டக்காரர் ராஜ்குமார் மன்றாடியார் தலைமை தாங்குகிறார். சிவ்பார்வதி மன்றாடியார் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.நவீன் மன்றாடியார், ஏ மகேன் மன்றாடியார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலயா முதல்வர்எஸ்.கே ராஜா பட்டர் கலந்து கொள்கிறார்.

விழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கப்பட்டு கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜையுடன் யாக சாலை பிரவேசம் மற்றும் இரவு 8 மணிக்கு முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் 2-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், இரவு 7 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மகா கும்பாபிஷேகம்

விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் 4-ம் கால யாக பூஜை செய்யப்பட்டு, 5.05 மணிக்கு கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு ராஜகோபுர விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 5.45 மணிக்கு ஆனூர் அம்மன் மூலாலய மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 9 மணிக்கு ஆனூர் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை பூஜை நடைபெறுகிறது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழாவில் திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பயிரன் குல மக்கள், பக்தர்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

---


Next Story