ரூ.1 கோடி கோவில் நிலம் மீட்பு
காங்கயம் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
பாண்டீஸ்வரர் கோவில்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா மங்கலப்பட்டியில் பாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் பூமாண்டவலசு கிராமத்தில் 3.86 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் மற்றும் இணை ஆணையாளர் அறிவுறுத்தலின்படி கோவில் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ரூ.1 கோடி நிலம் மீட்பு
அப்போது இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் 5 ஆக்கிரமிப்புதாரர்கள் வசம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து திருப்பூர் உதவி ஆணையாளர் செல்வராஜ் மற்றும் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்), காங்கயம் சரக ஆய்வாளர், கோவில் தக்கார் மற்றும் கோவில் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து 3.86 ஹெக்டேர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கோவில் வசம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்ற போர்டு வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும்.