பழமையான பகவான் கோவில் மீட்பு
உடுமலை அருகே கொங்கலக்குறிச்சியில் பழமையான பகவான் கோவில் மீட்கப்பட்டது.
வாஸ்து சாஸ்திரப்படி கட்டுமான பணிகள்
பல்வேறு சிறப்புகள், பெருமைகள், வரலாற்றை தாங்கி நிற்கும் பாரம்பரியம் மிக்கவை கோவில்கள். அதன் கட்டமைப்புக்கான மண்வளத்தை பரிசோதிப்பதற்கு நமது முன்னோர்கள் ஆற்றின் தெற்கு பகுதியில் கன்னி மூலையில் உள்ள உயரமான இடத்தை தேர்வு செய்து அந்த நிலத்தை பக்குவபடுத்தி தானியங்களை தூவி தண்ணீர் பாய்ச்சுவார்கள். 3 நாட்களில் தானியங்கள் முளைவிட்டால் அந்த நிலம் விவசாயம் மற்றும் கோவில் கட்டுவதற்கு ஏற்ற நிலம் என்று முடிவு செய்வார்கள்.
அதன் பின்பு வாஸ்து சாஸ்திரப்படி கட்டுமான பணிகள் தொடங்கி பலமாத கடின உழைப்புக்கு பின்பு கலசங்களுடன் கூடிய கம்பீரமான கோபுரத்துடன் கோவிலையும், ஊரையும் வடிவமைத்தார்கள். தங்கம், வெள்ளி மற்றும் ஐம்பொன்னாலான கோபுர கலசங்களில் நெல், உப்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காச்சோளம், எள் உள்ளிட்ட தானியங்களை சேகரித்தனர். அதில் வரகு மட்டுமே அதிக அளவில் இடம் பெற்றது. அதற்கு காரணம் இடியை தாங்கும் வல்லமை வரகு பெற்றிருந்ததை முன்னோர்கள் உணர்ந்து உள்ளனர்.
12 ஆண்டுகள் ஆயுட்காலம்
தானியங்களின் ஆயுட்காலம் 12 வருடங்களில் முடிந்து விடும் என்பதால் குடமுழக்கு விழா என்ற பெயரில் கோவிலை புனரமைத்து கலசங்களில் உள்ள தானியங்களை மாற்றி ஊரின் வளமும் செல்வமும் குறையாமல் பார்த்துக்கொண்டனர்.
கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தை விவசாய பணிக்கு வழங்கப்பட்டதுடன் பூஜைக்கு காணிக்கையாக பெறப்பட்ட பொருட்களை கடவுளுக்கு படைக்கப்பட்ட பிறகு பொதுமக்களுக்கே பிரித்து வழங்கப்பட்டது.
பகவான் கோவில் மீட்பு
அந்த வகையில் உடுமலையை அடுத்த பள்ளபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமத்தின் கன்னி மூலையில் புதர் மண்டி பயனற்று இருந்த பகவான் கோவிலை பொதுமக்கள் ஒன்றிணைந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டு உள்ளனர். 3 அடுக்குகள் முறையில் அமைந்துள்ள அந்த கோவிலில் தினந்தோறும் விளக்கு ஏற்றி பொதுமக்கள் வழிபாடும் செய்து வருகின்றனர்.
மேலும் கோவிலை சுற்றிலும் அதற்கும் மாரியம்மன் கோவிலுக்கும் சொந்தமான சுமார் 1.75 ஏக்கர் நிலம் இருந்ததும் பல லட்சம் மதிப்பிலான அந்த நிலம் தற்போது தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதும் தெரிய வந்தது.
கோவில் கட்ட வேண்டுகோள்
இதையடுத்து அந்த நிலத்தை மீட்டெடுப்பதற்கு பொதுமக்கள் சார்பில் உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மாத இறுதியில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுக்கொடுத்தும், தொல்லியல் துறை மூலமாக ஆய்வு நடத்தி கோவிலின் வரலாற்றை முழுமையாக வெளிக்கொணர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி இந்து சமய அறநிலையத்துறை தாமாகவே முன்வந்து கோவிலை கட்டி அர்ச்சகரை நியமித்து ஆகம விதிப்படி 3 கால பூஜை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.