மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 11.63 ஏக்கர் நிலம் மீட்பு
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதற்காக அதிகாரிகள் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும் எந்தெந்த கோவில்களுக்கு எங்கெங்கு எவ்வளவு நிலம் உள்ளது? அது ஆக்கிரமிப்பில் உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். அப்படி ஆக்கிரமிப்பில் இருந்தால் அவை மீட்கப்பட்டு வருகிறது. தாராபுரம் தாலுகா குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெத்தல்ரேவ் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 11.63 ஏக்கர் நிலம் அதே ஊரில் உள்ளது. ஆனால் அந்த நிலத்தை 2 பேர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரா.செல்வராஜ் தலைமையில் தாசில்தார் வி.கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வர் சா.ஆதிரை, செயல் அலுவலர்கள் சொ.சுந்தரவடிவேல், சதீஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் கெத்தல்ரேவ் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றனர்.
அப்போது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த 2 பேர் கோவில் வசம் நிலத்தை ஒப்படைப்பதாக கூறினர். இதையடுத்து கோவிலுக்கு சொந்தமான மொத்தம் 11.63 ஏக்கலம் நிலம் மீட்கப்பட்டு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும் என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.