2 ேகாவில்களின் ரூ.13 கோடி நிலம் மீட்பு


2 ேகாவில்களின் ரூ.13 கோடி நிலம் மீட்பு
x
திருப்பூர்


தாராபுரம் பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 2 கோவில்களின் ரூ.13 கோடி மதிப்புள்ள நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.

கோவில் நிலங்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பெரிய குமாரபாளையம் கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த ேகாவிலுக்கு சொந்தமான புஞ்சை நிலம் 24.65 ஏக்கர், முண்டுவேலம்பட்டி கிராமம் பொட்டிக்காம்பாளையம் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 36.96 ஏக்கர் புன்செய் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கிடையில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அனுபவித்து வருபவர்கள் அந்த நிலத்தை கோவில் வசம் ஒப்படைக்க முன்வந்தனர்.

அதன்படி நேற்று மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.குமரதுரை தலைமையில் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இரா.செல்வராஜ், இந்து சமய அறநிலைத்துறை நிலங்கள் பிரிவு தாசில்தார் கோபாலகிருஷ்ணன், தாராபுரம் சரக ஆய்வாளர் சா.ஆதிரை, கோவில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் சொ.சுந்தரவடிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலம் ஒப்படைக்கப்பட்டது.

ரூ.13 கோடி மதிப்பு

2 கோவில்களுக்கு சொந்தமான 61.61 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.13 கோடி ஆகும். மீட்கப்பட்ட அந்த நிலத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்பு பெயர் பலகை வைக்கப்பட்டது.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும் போது, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டிடங்களை தனியார் ஆக்கிரமித்து உள்ளனர். அவர்களே முன்வந்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் கோவில் நடைமுறை சட்டத்தின் படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்க கூடும் என்று தெரிவித்தனர்.


Next Story