கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி


கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
x
திருப்பூர்


திருப்பூரில் விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவில்களில் நடைபெற்றது.

வித்யாரம்பம்

நவராத்திரி விழாவையொட்டி திருப்பூர் மாநகரில் கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து தினமும் வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. விஜயதசமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வி, கலைகள் எதை தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பதால் குழந்தைகளை முதன்முறையாக பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக்கருவிகள், நடனம் பயிற்சி மேற்கொள்வதற்கும், புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வதற்கும் உகந்தநாள் இதுவாகும்.

குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் கோவில்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் நேற்று திருப்பூர் அய்யப்பன் கோவில், ஈஸ்வரன் கோவில், குருவாயூரப்பன் கோவில், வாலிபாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடைபெற்றது. காலை எழுந்து நீராடி சாமி தரிசனம் செய்து தங்களது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர் கோவில்களுக்கு குழந்தையுடன் சென்றனர்.

கல்வி உபகரணங்கள்

குழந்தைகளுக்கு அர்ச்சகர்கள் தங்க வேலால் நாக்கில் எழுதி எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள். அதுபோல் அரிசியிலும் குழந்தைகளின் கைப்பிடித்து எழுத வைத்தனர். அதன்பிறகு சிலேட்டுகளிலும் குழந்தைகள் எழுதினார்கள். திரளான குழந்தைகள் பங்கேற்றனர். வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டன.


Next Story