பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
திருப்பூர்


வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பூர் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. கோவிந்தா, கோவிந்தா என திரளான பக்தர்கள் கோஷமிட்டபடி பெருமாளை வழிபட்டனர்.

வீரராவகப்பெருமாள் கோவில்

திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் அந்த வழியாக பிரவேசிப்பார். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று காலை நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் வீரராகவப்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து நம்மாழ்வார் மற்றும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள்.

அனுமந்தராயர், மூலவரையும், தாயார்களையும் தரிசனம் செய்யும் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை வழிபட்டனர். தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்காக அரிசிக்கடை வீதி வரை பக்தர்கள் வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்தார்கள். இதுதவிர சிறப்பு தரிசன கவுண்டரிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருப்பூர் திருப்பதி

பெருமாளை தரிசனம் செய்துவிட்டு சொர்க்கவாசல் வழியாக வந்த பக்தர்களுக்கு ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரித்து வழங்கினார்கள். மேலும் பிரதோஷ வழிபாட்டு குழுவினர் சார்பில் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இதுபோல் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள திருப்பூர் திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராயபுரம் கிருஷ்ணன் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் பிரவேசித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில்வழி பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதுபோல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story