அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான அங்கீகார கடிதத்தில் கையெழுத்திடும் தார்மீக உரிமையை ஓ.பன்னீர்செல்வம் இழந்து விட்டார்-கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கான அங்கீகார கடிதத்தில் கையெழுத்திடும் தார்மீக உரிமையை ஓ.பன்னீர்செல்வம் இழந்து விட்டார்-கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பேட்டி
x

உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வில் போட்டியிட கூடிய வேட்பாளர்களுக்கான அங்கீகார கடிதத்தில் (பி.பார்ம்) கையெழுத்திடும் தார்மீக உரிமையை ஓ.பன்னீர்செல்வம் இழந்து விட்டார் என்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கூறினார்.

கிருஷ்ணகிரி

கடிதம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் கட்சி நிர்வாகிகளுக்கு பி.பார்ம் கையெழுத்திடுவது குறித்து கூறியுள்ளார்.

தார்மீக உரிமையை இழந்து விட்டார்

மேலும் அந்த கடிதத்தில், ஒற்றை தலைமை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளதால் தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். கட்சியில் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஒரு கட்சியின் தலைமையாக இருந்து கொண்டு பொதுக்குழுவில் பங்கேற்று விவாதங்களை விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனால் பொதுக்குழு நடத்த கூடாது என்கிற நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சி கட்டுப்பாடுகளை, கொள்கைகளை மீறி நீதிமன்றத்திற்கு செல்கிறார்.

பொதுவாக கட்சி கட்டுப்பாட்டை மீறி நீதிமன்றம் சென்றால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது விதி. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர் அங்கீகார கடிதத்தில் (பி.பார்ம்) கையெழுத்திடும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்.

வலிமையான ஒற்றை தலைமை

அ.தி.மு.க.வில் வலிமையான ஒற்றை தலைமை வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பான்மையானவர்கள் உள்ளனர். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் 70 பேரும், மாவட்ட செயலாளர்கள் 70 பேரும், சட்டமன்ற உறுப்பினர்கள் 63 பேரும், 2 ஆயிரத்து 580 பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றை தலைமை வேண்டும் என்று தான் வலியுறுத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க.வின் எதிரி தி.மு.க. தான். 1999-ம் ஆண்டு பென்னாகரத்தில் உதயசூரியன் சின்னம் முன்பு நின்ற புகைப்படம் வெளியான காரணத்திற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய செயலாளரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கி கடுமையாக எச்சரித்தார். ஆனால் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், கவர்னர் மாளிகையில் முதல்-அமைச்சருடன் அமர்ந்து தேனீர் விருந்தில் கலந்து கொள்கிறார்.

சட்டசபையில் முதல்-அமைச்சரை பாராட்டி பேசுகிறார். இதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க.வை எதிர்க்க வலிமையான ஒற்றை தலைமை தேவை. அதனால் எடப்பாடி பழனிசாமியை கட்சி நிர்வாகிகள் ஆதரிக்கிறார்கள்.

1½ கோடி தொண்டர்களை கொண்ட இந்த கட்சியை வலிமையாக நடத்திட வேண்டும். வரக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை சந்திக்க வலிமையான ஒற்றை தலைமை தேவை. பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், நகர செயலாளர் கேசவன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.


Next Story