விழுப்புரத்தில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை மும்முரம்
விழுப்புரத்தில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணர் அவதரித்த திருநாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் உள்ள கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கண்ணன் பெயரை உச்சரித்து அவரது சிலைக்கு பூஜை செய்தால் வாழ்க்கையில் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும் என்பதால் வீடுகளிலும் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவார்கள். இதற்காக கிருஷ்ணர் பொம்மைகளை வைத்து வழிபடுவது வழக்கம். கிருஷ்ணரை வீட்டிற்குள் வரவேற்கும் விதமாக அவரது பாதம் மாக்கோலமாக வரையப்படும். இதன் மூலம் கிருஷ்ணர், வீட்டிற்குள் நடந்து வருவதாக ஐதீகமாக இருக்கிறது. மேலும் கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணெய், சீடை, முறுக்கு ஆகியவற்றை படைத்து வழிபடுவார்கள்.
இந்த விழாவிற்கு தற்போது விழுப்புரம் நகரில் கிருஷ்ணர் பொம்மைகளின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் திரு.வி.க. வீதி, நேருஜி சாலை உள்ளிட்ட இடங்களில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்காக உள்ளது. சிறிய அளவிலான பொம்மைகள் ரூ.50-ல் இருந்து பெரிய அளவிலான பொம்மைகள் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.