கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கிருஷ்ணஜெயந்தி விழா
தூத்துக்குடி கதிர்வேல்நகரில் உள்ள ராதா கிருஷ்ண பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
அதன்படி எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வர்ணம் தீட்டுதல் போட்டிகளும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு படம் பார்த்து வரையும் ஓவிய போட்டியும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பனை ஓவியம் வரையும் போட்டியும் நடத்தப்பட்டது.
10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டியும், கிருஷ்ண கானம் குழு நடன போட்டியும் நடத்தப்பட்டது.
பரிசு
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பக்தலட்சண கிரிமகராஜ், கோபிநாத், நமச்சிவாயம், கிங் அகாடமி பேச்சிமுத்து, சிவசண்முகம், ராமலட்சுமி ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
விழாவில் திரளான பக்தர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராதாகிருஷ்ண பெருமாள் கோவில் சேவாபாரதி மாநில தலைவர் பலராம் தாஸ் செய்து இருந்தார்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் ராம காளியப்பன் தலைமையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
அப்போது பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. புதூர், விளாத்திகுளம் பகுதிகளை சேர்ந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.