கிருஷ்ணகிரி அனுசுயாவை சந்தித்து நலம் விசாரிப்பு: ஆணவ படுகொலையை தடுக்க தனிச்சட்டம் வேண்டும்-கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


கிருஷ்ணகிரி அனுசுயாவை சந்தித்து நலம் விசாரிப்பு: ஆணவ படுகொலையை தடுக்க தனிச்சட்டம் வேண்டும்-கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
x

தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம்

நலம் விசாரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அருணபதி கிராமத்தில் காதல் திருமணம் செய்த சுபாஷ் என்பவரும், அவருடைய தாயாரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் இளம்பெண் அனுசுயா படுகாயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். மேலும், அவர் அனுசுயாவின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனுசுயாவுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் குணமாக இன்னும் 2 மாதங்கள் ஆகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சாதி மறுப்பு திருமணம் என்பதற்காகவே மகன் மற்றும் தாயை கொன்றதோடு மருமகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார். அந்த அளவுக்கு சாதி வெறி ஆட்டிப்படைக்கிறது. எனவே, சமூகத்தில் இருப்பவர்கள் சாதி வெறியை எதிர்த்து போராட வேண்டும். அனுசுயாவிற்கும், சுபாசுக்கும் நடந்துள்ள இந்த கொடுமை, இனிமேல் வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது.

தனிச்சட்டம்

தமிழக அரசு சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இதனை தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் சாதியை தூண்டிவிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். யார்? யார்? எல்லாம் பின்னால் இருந்து தூண்டி விடுகிறார்களோ?

அவர்களை எல்லாம் தண்டனைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் தொடரும் இதுபோன்ற சாதிய ஆதிக்க ஆணவ படுகொலைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.


Next Story