குலாம் நபி ஆசாத் குறித்து கே.எஸ்.அழகிரி விமர்சனம்


குலாம் நபி ஆசாத் குறித்து கே.எஸ்.அழகிரி விமர்சனம்
x

பழுத்த மட்டை மரத்தில் ஒட்டாது என்று குலாம் நபி ஆசாத் குறித்து கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்தார்.

விருதுநகர்

பழுத்த மட்டை மரத்தில் ஒட்டாது என்று குலாம் நபி ஆசாத் குறித்து கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்தார்.

நடைபயணம்

விருதுநகரில் உள்ள ஒரு மண்டபத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி கே.வி.தங்கபாலு, முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, கட்சியின் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் பேசினர். அசோகன் எம்.எல்.ஏ., மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ரீராஜா சொக்கர், ரங்கசாமி, முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் கே,எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 7-ந் தேதி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் தொடங்குகிறார். காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தில் தமிழகத்தை புறக்கணிப்பதாக கூறுவது ஏற்புடையதல்ல. கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவதே தமிழகத்திற்கு பெருமை. இந்த நடை பயண தொடக்க நிகழ்ச்சியில் 10 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

குலாம் நபி ஆசாத்

காங்கிரசில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் பழுத்த மட்டை போன்றவர். பழுத்த மட்டை மரத்தில் ஒட்டாது. ஒரு அமைப்பில் குறைபாடு இருந்தால் அதனை சீரமைக்க அவர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அண்ணாமலை பேசுவது போதாது என்று கவர்னரும் பேச தொடங்கியுள்ளார். திருக்குறள் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதல்ல.

திருக்குறளுக்கு 59 ஆங்கில மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. யாரும் இந்த கருத்தை கூறவில்லை. சாதாரண பா.ஜ.க. தொண்டன் கூறினால் பரவாயில்லை. கவர்னர் இப்படி பேசக்கூடாது.

வலுவான கூட்டணி

வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையும். இதே போன்று அகில இந்திய அளவிலும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைய வேண்டும். பா.ஜ.க. 272 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியது. தற்போது பா.ஜ.க.வின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை காங்கிரஸ் தொடங்கினாலும் தற்போது அதிகபட்ச வரிவிதிப்புக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தி.மு.க.வின் நிலைப்பாட்டில் முரண்பாடு இல்லை. இதனை அமைச்சர் எ.வ.வேலு தெளிவுபடுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story