குப்பைக்கிடங்கை இடமாற்றம் செய்ய ஊராட்சி வலியுறுத்தல்
உடுமலை சிவசக்தி காலனியில் உள்ள குப்பைக்கிடங்கை மாற்றவேண்டும் என்று பெரியகோட்டை ஊராட்சி வலியுறுத்தி வருகிறது.
பெரியகோட்டை ஊராட்சி
உடுமலை அருகே உள்ள பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட சிவசக்தி காலனி பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் நகராட்சிக்கு சொந்தமான பழைய குப்பைக்கிடங்கும், அதையொட்டி குப்பைகிடங்கும் உள்ளது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த நகராட்சி குப்பைக்கிடங்கு அந்த பகுதி பொதுமக்களின் போராட்டம் காரணமாக கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கணபதிபாளையம் பிரிவு அருகே மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பெரியகோட்டை ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள், இந்த ஊராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.இந்த பகுதியை சுற்றி குடியிருப்பு பகுதிகள் உள்ளன. எனவே இந்த குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று கிராம சபைகூட்டத்திலும் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை
இந்த நிலையில் பெரியகோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெரியகோட்டை ஊராட்சி நகராட்சிபகுதியை ஒட்டி அமைந்துள்ள பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சிக்கென குப்பைகளை தரம்பிரித்து கொட்ட தனியாக இடம் இல்லை.மேலும் நெருக்கமான குடியிருப்புகளின் நடுவில் குப்பைக்கிடங்கு உள்ளதால் நோய்தொற்று மற்றும் சுவாசக்கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். அதனால் சுகாதாரம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த குப்பை கிடங்கை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மு.கந்தசாமி, இந்த கோரிக்கை மனுவை நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தார்.
எம்.எல்.ஏ.ஆய்வு
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைபடி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.10 முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக பெரியகோட்டை ஊராட்சி சிவசக்தி காலனியில் உள்ள இந்த குப்பைகிடங்கை மாற்ற வேண்டும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பெரியகோட்டை ஊராட்சி தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் சி.விஸ்வநாதன், முன்னாள் தலைவர்கள் பி.பாலசுப்பிரமணியம், ஆர்.முருகேசன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், அ.தி.மு.க.நகர செயலாளர் ஏ.ஹக்கீம் ஆகியோர் உடனிருந்தனர்.