வேகமாக நிரம்பும் குடகனாறு அணை
குடகனாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.
வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் 15 ஷட்டர்களுடன் குடகனாறு அணை அமைக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரம் 27 அடி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து ஏற்படும். அணை நிரம்பியதும் அதில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் குடகனாறு அணைக்கு வந்து சேரும். இந்த அணை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதேபோல் கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் நிலம் இந்த அணை மூலம் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அணையில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு ஷட்டர்களை பராமரிக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குடகனாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையில் 15 அடி வரை தண்ணீர் உள்ளது. இந்நிலையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் நேற்று குடகனாறு அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நீதிபதி, உதவி பொறியாளர் முருகன், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரிகோவிந்தன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.