10 கோவில்களில் குடமுழுக்கு விழா
கும்பகோணம் பகுதியில் உள்ள 10 கோவில்களில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
கும்பகோணம் பகுதியில் உள்ள 10 கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
8 கோவில்களில் குடமுழுக்கு
திருப்பனந்தாள் அருகே மானம்பாடி, மட்டியூர் ஆகிய கிராமத்தில் உள்ள விநாயகர், அய்யனார், மாரியம்மன், காளியம்மன், மாணிக்க நாச்சியார் ஆகிய கோவில்கள் உள்ளன. மேலவழி பகுதியில் திரவுபதி அம்மன், பூமிதேவி அம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. திருப்பனந்தாள் சன்னதி தெருவில் வேம்பு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த 8 கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி கடந்த 23-ந்தேதி விக்னேஸ்வர பூஜைகளும், யாகசாலை பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் நிறைவடைந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்கிட கடங்கள் புறப்பட்டு கோவில்களின் விமானங்களுக்கு குடமுழுக்கு நடந்தது. இதில் தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், காசி திருமட அதிபர் காசிவாசி எஜமான் சுவாமிகள், இளவரசு சபாபதி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அம்மாப்பேட்டை
அம்மாப்பேட்டை ஒன்றியம் கம்பர் நத்தம் ஊராட்சி மேல தெருவில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. விழாவில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கடங்கள் புறப்பாடு செய்து கோவில் விமான கோபுர கலசங்களுக்கு கண்ணப்பா சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். இதில் கம்பர் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சத்ய நாராயணன், ஊராட்சி செயலாளர் மோகன் குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருப்புவனம்
கும்பகோணம் அருகே திருபுவனம் வடக்கு மடவளாகத்தில் நாச்சியார் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து யாக கால பூஜைகள் தொடங்கின. நேற்று சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க சுவாமி பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காலை 11 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மூலவர் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ராமலிங்கம் எம்.பி, அரசு கொறடா கோவி. செழியன், தி.மு.க. பேரூர் செயலாளர் எஸ். கே. பஞ்சநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.