பூட்டிக்கிடக்கும் சேமிப்பு கிடங்கு
கொங்கல்நகரத்தில் பயன்பாடு இல்லாமல் பூட்டிக் கிடக்கும் சேமிப்பு கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேமிப்பு கிடங்கு
குடிமங்கலம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இப்பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்து தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. கொங்கல்நகரம் பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இது தவிர மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது மக்காச்சோளம் 110 நாள் நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும், குறைந்த அளவு தண்ணீர் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பயன்பாட்டுக்கு வருமா?
விவசாயிகள் அறுவடை செய்த விளைபொருள் களை சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து விற்பனை செய்யும் வகையில் கொங்கநகரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் ரூ.39 லட்சம் செலவில் 500 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டுள்ளது. சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் அறுவடை காலங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இருப்பு வைக்க முடியாமல் திணறி வருகின்றனர். கொங்கல் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் அதிகஅளவில் நடைபெற்று வரும் நிலையில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.