சொட்டு நீர்ப்பாசனத்தில் முட்டைகோஸ் சாகுபடி
குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர்ப் பாசனத்தில் முட்டைகோஸ் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதிய ரகங்கள்
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக லாபம் தரும் பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் குளிர்ந்த பிரதேசங்களில் பயிரிடப்படக் கூடிய பீட்ரூட், காலிபிளவர், முட்டைகோஸ் போன்ற மலைப் பயிர்களை சமவெளிப் பகுதிகளில் பயிர் செய்து வெற்றியடைந்துள்ளனர். இதனையடுத்து சமவெளிப் பகுதிகளில் பயிரிடக் கூடிய வகையில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் குறைந்த நீரில் முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பந்தல் அமைத்து பீர்க்கன், சுரை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்தோம். ஆனால் அது லாபகரமாக இல்லாத நிலையில் மாற்றுப்பயிர் குறித்து யோசித்த போது நமது பகுதியில் அதிக அளவில் பயிரிடாத காய்கறியாக இருந்தால் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று திட்டமிட்டோம். அதன்படி முட்டைகோஸ் சாகுபடியைத் தேர்வு செய்தோம். குளிர் பிரதேசப்பயிரான முட்டைகோஸ் வளர்வதற்கேற்ற குளிர்ந்த வானிலை நமது பகுதியிலும் நிலவுவது சாதகமான அம்சமாகும். மேலும் முட்டைக்கோசைப் பொறுத்தவரை வேர்ப் பகுதியில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதேநேரத்தில் தண்ணீர் தேங்காமல் தவிர்க்க வேண்டும். அதனைக் கருத்தில் கொண்டு சொட்டுநீர்ப் பாசனத்தில் முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளோம்.
இனக்கவர்ச்சிப்பொறி
3 மாத பயிரான முட்டைகோஸ் நாற்றுகள் குழித்தட்டு முறையில் வளர்க்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. அதனை வாங்கி ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் நாற்றுகள் வரை நடவு செய்ய முடியும். வளரும் பருவத்தில் களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். மேலும் வெட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறிகளைப் பயன்படுத்தி தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
அசுவினிகளைக் கட்டுப்படுத்த 3 சதவீதம் வேப்பெண்ணெய் தெளிக்கலாம். மேலும் ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் இனக் கவர்ச்சிப் பொறிகளைப்பயன்படுத்தலாம். மேலும் இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோய், கருப்பு அழுகல் நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க தோட்டக்கலைத்துறையினரின் ஆலோசனை பெறலாம். முறையான பராமரிப்புகள் மேற்கொண்டால் ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை மகசூல் ஈட்ட முடியும்.நட்ட 75 வது நாளில் அறுவடை செய்யத் தொடங்கி 120 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். வெங்காயத்துக்கு மாற்றாக போண்டா, வடை போன்றவற்றில் முட்டைகோஸ் பயன்படுத்தப்படுவதால் வெங்காயம் விலை உயரும் காலங்களில் முட்டைகோசுக்கு நல்ல மவுசு இருக்கும். இதனால் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உற்பத்திச்செலவு ஒரு கிலோவுக்கு ரூ.5-க்கு குறைவாகவே ஆகும் நிலையில் ரூ.15 முதல் ரூ.25 வரை விற்பனை ஆகும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.