திறந்தவெளி கழிப்பிடம் போல மாறிய அவலம்
கணியூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கழிவறைக் குழாய் உடைப்பால் திறந்த வெளிக் கழிப்பிடம் போல மாறிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள்
மடத்துக்குளத்தையடுத்த கணியூரில் மடத்துக்குளம் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
கணியூர் பகுதி மட்டுமல்லாமல் கடத்தூர், ஜோத்தம்பட்டி, அரியநாச்சிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் நோய் தீர இந்த ஆஸ்பத்திரியை தேடி வருகின்றனர்.மேலும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் அதிக எண்ணிக்கையில் இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரியில் கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவுகளை செப்டிக் டேங்குக்கு கொண்டு செல்லும் குழாய் உடைந்துள்ளது.இதனால் மனிதக் கழிவுகள் திறந்த வெளியில் வெளியேறி வருகிறது.
திறந்தவெளி கழிப்பிடம் போல மாறிய அவலம்
பல நாட்களாக சீரமைக்கப்படாத நிலையில் தொடர்ந்து வெளியேறுவதால் ஆஸ்பத்திரி வளாகம் திறந்த வெளிக் கழிப்பிடம் போல மாறியுள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதிக்கு மிக அருகில் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கி சிகிச்சை பெறும் அறை உள்ளது.இந்த அறையில் உள்ள தாய்மார்கள் கடும் துர்நாற்றத்தால் தவித்து வருகின்றனர்.
மேலும் இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு சுகாதாரக் கேடுகள் ஏற்படுத்தும் நிலையில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் புதிய நோய்களை சுமந்து செல்லும் அவலம் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே உடனடியாக குழாய் உடைப்பை சீரமைத்து சுகாதார சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.