ரூ.90 ஆயிரத்தை உறவினரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்சு பணியாளர்களுக்கு பாராட்டு
விபத்துக்குள்ளான டாஸ்மாக் கடை ஊழியரின் ரூ.90 ஆயிரத்தை உறவினரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டினர்.
திருவண்ணாமலை புதிய கார்க்கானா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவர் சிறுநாத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இவர் பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். தென்அரசம்பட்டு கிராமத்திற்கு அருகில் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானார்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். வேங்கிக்காலில் இருந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஆறுமுகத்தை மீட்டு முதலுதவி செய்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது அவரிடம் இருந்த ஓட்டுனர் உரிமம் உள்பட பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூ.90 ஆயிரத்து 280-ஐ மருத்துவ உதவியாளர் ஷேக் முத்தலி மற்றும் டிரைவர் மணி ஆகியோர் மருத்துவமனை டாக்டர் மற்றும் செவிலியர் முன்னிலையில் ஆறுமுகம் மனைவி சாவித்ரியிடம் ஒப்படைத்தனர்.
உரிய நேரத்தில் விபத்துக்கு உள்ளானவருக்கு முதலுதவி செய்தும், உடைமைகளை பத்திரமாக ஒப்படைத்தமைக்காக 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவரை மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.