கர்ப்பிணிக்கு உதவிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு


கர்ப்பிணிக்கு உதவிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
x

நெல்லை சந்திப்பில் கர்ப்பிணிக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் சுவாதிகா. இவர் சம்பவத்தன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ரெயில் நிலைய 2-வது நடைமேடையில் இருந்து முதலாவது நடைமேடைக்கு கையில் பெரிய டிராலி பேக்குடன் சோர்வாக நடந்து வந்தார். அவருடைய குழந்தையும் தாயின் கையை பிடித்தவாறு வந்தது. வெயில் அதிகமாக இருந்ததால் தன்னை தூக்கி கொள்ளுமாறு குழந்தை தாயிடம் கெஞ்சியது. ஆனால் சோா்வாக இருந்ததால் கர்ப்பிணியால் குழந்தையை தூக்க முடியாமல் தவித்தார்.

இதனைப் பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகா விரைந்து சென்று, கர்ப்பிணியின் குழந்தையை வாஞ்சையுடன் அணைத்து தூக்கி கொண்டார். பின்னர் கர்ப்பிணியை முதலாவது நடைமேடைக்கு அழைத்து வந்தார். இதற்கிடையே அங்கு வந்த கர்ப்பிணியின் உறவினரிடம் குழந்தையை சப்-இன்ஸ்பெக்டர் ஒப்படைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. கர்ப்பிணிக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகாவை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.


Next Story