113 பேருக்கு ரூ.1 கோடியே 91 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் 113 பேருக்கு ரூ.1 கோடியே 91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.
குடியரசு தின விழா
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதற்காக கல்லூரி வளாகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. காலை 8.05 மணிக்கு கலெக்டர் வினீத் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களை கலெக்டர் பறக்கவிட்டார். பின்னர் கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் ஆகியோர் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டனர்.
ரூ.1 கோடியே 91 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கலெக்டர் கவுரவித்தார். தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த 92 அரசு அலுவலர்கள், பணியாளர்கள், காவல்துறையினருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்கள், 157 காவல்துறையினர் மற்றும் 14 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் என மொத்தம் 263 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு பேட்டரி வீல் சேர்கள், வருவாய்த்துறை சார்பில் 10 பேருக்கு விதவை உதவித்தொகை, 23 பேருக்கு இ-பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 3 பேருக்கு இயற்கை மரணத்தொகை, 7 பேருக்கு கல்வி உதவித்தொகை, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 11 பேருக்கு கல்வி கடனுதவி, கூட்டுறவு நல சங்கங்கள் சார்பில் 6 பேருக்கு டாப்செட்கோ கடனுதவி, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் கருவி, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 19 பேருக்கு விலையில்லா சலவை பெட்டிகள், 22 பேருக்கு தையல் எந்திரங்கள் உள்பட மொத்தம் 113 பேருக்கு ரூ.1 கோடியே 91 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகள்
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கண் கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குமார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 15 வேலம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, அவினாசி செயிண்ட் தாமஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது.கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் அபிஷேக் குப்தா, வனிதா, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லட்சுமணன், முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை கலெக்டர்கள், காவல்துறையினர், அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.