ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய குளச்சல் மீனவர்கள்


ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய குளச்சல் மீனவர்கள்
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தடைக்காலம் முடிந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய குளச்சல் மீனவர்கள் வலையில் ஏராளமான கிளிமீன்கள் சிக்கின. இந்த மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் கவலை அடைந்தனர்.

கன்னியாகுமரி

குளச்சல்:

தடைக்காலம் முடிந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய குளச்சல் மீனவர்கள் வலையில் ஏராளமான கிளிமீன்கள் சிக்கின. இந்த மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் கவலை அடைந்தனர்.

தடைக்காலம் முடிந்தது

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மேற்கு கடல் பகுதிகளில் விசைப்படகுகளுக்கு விதிக்கப்பட்ட 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடந்த 31-ந் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.

இதையடுத்து 1-ந் தேதி அதிகாலை முதல் விசைப்படகுகளில் மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர். ஆழ்கடல் பகுதியில் தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். இந்த மீன்கள் உணவுக்காக வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுதவிர கிளி மீன்கள், செந்நவரை, நாக்கண்டம் போன்ற மீன்களும் கிடைக்கும். இந்த வகை மீன்கள் பற்பசை தயாரிப்பு ஆலை மற்றும் மீன் எண்ணெய் ஆலைகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.

ஏராளமான கிளி மீன்கள் சிக்கின

இந்தநிலையில் 1-ந் தேதி மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 3 படகுகள் நேற்று காலையில் கரை திரும்பின. இந்த விசைப்படகுகளில் ஏராளமான கிளி மீன்கள் கிடைத்தன.

இது தவிர கணவாய் உள்ளிட்ட மீன்களும் சிக்கின. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து விற்பனை செய்தனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ரூ.2 ஆயிரம் விலை போனது. இதற்கு முன்பு ஒரு பெட்டி ரூ.4 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரம் வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது. கணவாய் மீன் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விலைபோனது.

மீனவர்கள் கவலை

மேற்கு கடல் பகுதியில் 60 நாட்கள் தடையை முன்னிட்டு மீன் ஆலைகள் இயங்கவில்லை. இந்த ஆலைகள் இன்னும் சில நாட்களில் இயங்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீன்கள் எதிர்பார்த்த அளவுக்கு விலை போகாததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.


Next Story