ஒட்டுக்குளக்கரைப்பகுதியில் சேறும்,சகதியுமான மண்பாதை
உடுமலை அருகே உள்ள ஒட்டுக்குளத்தின் கரைப்பகுதியில் உள்ள மண்பாதை மழைத்தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளதால் இருசக்கர வாகனத்தில் வந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஒட்டுக்குளம் கரைப்பாதை
உடுமலை நகராட்சி பகுதியை ஒட்டியுள்ளது ஒட்டுக்குளம். இந்தகுளம் 10 அடிஉயரம் கொள்ளளவு கொண்டது.நகராட்சி பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர்.லே-அவுட் எக்ஸ்டன்சன் குடியிருப்பு பகுதியை அடுத்துள்ள இடத்தில் இருந்து தொடங்கும் இந்த குளம் போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்காம்பாளையம் கிராமம் வரை செல்கிறது. குளத்தின் தொடக்கம் முதல் இந்த கிராமம் வரை குளத்தின் கரைப்பகுதி சுமார் 3 கி.மீ.தூரத்திற்கு மண்பாதையாக உள்ளது. சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்டவீடுகள் உள்ளன. சுமார் 1,600 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் இருந்து உடுமலை நகராட்சி பகுதிக்கு தார்சாலையில் வந்து செல்ல வேண்டுமென்றால் ராகல்பாவி கிராமம் வழியாக பொள்ளாச்சி சாலைக்கு சென்றுவரவேண்டும். இந்த சாலையில் சென்றுவருவது அதிக தூரம் என்பதால், இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இருசக்கர வாகனங்களில் உடுமலைநகராட்சி பகுதிக்கு வந்து செல்வதற்கு இந்த குளத்தின் கரைப்பகுதியில் உள்ள மண்பாதையையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். சில சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன.
சேரும், சகதியுமான பாதை
இந்த நிலையில் மழைபெய்தால் இந்த மண்பாதை சேரும் சகதியுமாகி விடுகிறது.அதன்படி கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால் இந்த மண்பாதை சேறும், சகதியுமாகி உள்ளது. குண்டும், குழியுமான இந்த பாதையில் பள்ளமான இடங்களில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அதனால் இந்த மண்பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் உடுமலை நகர பகுதிக்கு வந்து செல்கிறவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனால் இந்த மண்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நல்ல முறையில் பாதை அமைத்து போக்குவரத்து வசதியை செய்து தரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு போடிபட்டி ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. தற்போது மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது
முள் செடிகள்
அத்துடன் இந்த குளத்தின் கரையை ஒட்டி முள் செடிகள் வளர்ந்து மண் பாதை வரை நீட்டிக்கொண்டுள்ளது. அதனால் இருசக்கர வாகனத்தில் வருகிறவர்கள், எதிரே வருகிறவர்களுக்கு வழிவிட்டு ஓரமாக ஒதுங்கி செல்லும்போது அந்த செடிகளில் உள்ள முள்கள் கீறி காயமடைந்து வந்தனர். இந்த நிலையை சுண்டக்காம்பாளையம் பொதுமக்கள் போடிபட்டிஊராட்சி தலைவரிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவர் டி.சவுந்தரராஜன் அந்த மண்பாதை பகுதியில் நீட்டிக்கொண்டிருந்த முள் செடிகளை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இந்த குளத்தின் கரைப்பகுதியில் மண்பாதை வரை நீட்டிக்கொண்டிருந்த முள் செடிகள் அகற்றப்பட்டன.