குலசேகரன்பட்டினம் தருவைகுளத்துக்கு தண்ணீர் வந்தது
திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளம் நிரம்பி, குலசேகரன்பட்டினம் தருவைகுளத்துக்கு தண்ணீர் வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உடன்குடி:
திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளம் நிரம்பி, குலசேகரன்பட்டினம் தருவைகுளத்துக்கு தண்ணீர் வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எல்லப்பநாயக்கன்குளம் நிரம்பியது
ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் பாசன வசதி பெறும் தென்திருப்பேரை கடம்பாகுளம் முதல் திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளம் வரையிலான குளங்களுக்கு தாமிரபரணி ஆற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதில் திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளம் நிரம்பி மறுகால் விழுந்து, குலசேகரன்பட்டினம் தருவைகுளத்துக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
தருவைகுளம் நிரம்பினால் குலசேகரன்பட்டினம், உடன்குடி சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர், விவசாயத்துக்கும் ஆதாரமாக விளங்கும்.
2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்
மேலும் குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தை அடுத்து ஆதியாக்குறிச்சி, தீதத்தாபுரம், சிறுநாடார்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஊருணிகள், குட்டைகளுக்கு தண்ணீர் செல்லும். பின்னர் கருமேனி ஆற்றில் கலந்து மணப்பாடு கடலில் சங்கமிக்கும்.
இதன் மூலம் அப்பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே தருவைகுளம் மற்றும் பிற குளங்கள் நிரம்பும் வகையில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.