குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


பணமோசடி புகாரில் சிக்கிய குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி

பண மோசடி புகாரில் சிக்கிய குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த தாண்டவம். இவர் இதற்கு முன்பு மதுரை ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தபோது அங்கு புகார் அளிக்க வந்த பெண்ணிடம் பழகி பணத்தை வாங்கிக்கொண்டு திரும்ப தராமல் ஏமாற்றி வந்ததாக புகார் எழுந்தது.

அதாவது, ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2019-ம் ஆண்டு தங்களுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டு அதற்கான பணியை மொத்தமாக அலங்காநல்லூரை சேர்ந்த சிவில் என்ஜினீயரிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் என்ஜினீயர், அந்த பெண்ணிடம் பணத்ைத வாங்கிக் கொண்டு வேலையை முடிக்காமல் இழுத்தடித்து வந்தாா்.

பணம் மோசடி புகார்

இதுகுறித்து அந்த பெண் ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, அங்கு இன்ஸ்பெக்டராக இருந்த ஆனந்த தாண்டவம், இந்த புகார் தொடர்பாக இருதரப்பையும் வரவழைத்து விசாரித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆனந்த தாண்டவம், அந்த பெண்ணிடம் பழகியதுடன் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாகவும், தான் பாலியல் ரீதியாக ஏமாற்றப்பட்டதாகவும் அந்த பெண் புகார் அளித்தார்.

பணி இடைநீக்கம்

இந்த புகார் மனு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர் குளத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆனந்த தாண்டவத்தை பணி இடைநீக்கம் செய்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.


Next Story