குழித்துறை ரெயில் நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும்


குழித்துறை ரெயில் நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறை ரெயில் நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி

குழித்துறை:

குழித்துறை ரெயில் நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலந்துரையாடல்

குழித்துறை ரெயில் நிலையத்தில் மத்திய அரசின் அமிர்தா பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது. இந்தநிலையில் நேற்று குழித்துறை ரெயில் நிலையத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதை தொடர்ந்து ரெயில்வே பணிகள் தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரூ.5 கோடியில் விரிவாக்க பணி

இந்த நிகழ்ச்சிக்கு திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே மேலாளர் சர்மா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குழித்துறை ரெயில்வே நிலையம் ரூ.5 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் முன் பகுதியில் வாகனங்கள் வந்து செல்ல இருவழிப் பாதையாக மாற்றப்பட உள்ளது. வாகனங்களில் வரும் பயணிகள் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் ரெயில் நிலையத்தின் முன் பகுதி விரிவாக்கம் செய்யப்படுகிறது. மேலும் பிளாட்பாரம் தற்போது மேடு, பள்ளமுமாக உள்ளது. அவை ஒரே மட்டமாக அமைக்கப்படுகிறது. ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் நனையாமல் இருப்பதற்கு தேவையான இடத்தில் மேற்கூரைகள் இருபுறமும் அமைக்கப்படும். பயணிகள் வசதிக்காக 400 இருக்கைகளும், 100 மின்விசிறிகளும் மற்றும் வாகன பார்க்கிங் மேற்கூரை வசதியுடன் இருமடங்காக அதிகரிக்கப்படும். ரெயில் வந்து செல்லும் விவரங்கள் எலக்ட்ரானிக் அறிவிப்பு பலகையாக மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் பால்எட்வின், விஜுவின், அருண், ரவிஜித் மற்றும் மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல் அமீன், நல்லூர் பேரூராட்சி தலைவர் வளர்மதி துணைத் தலைவர் அர்ச்சுனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பெயரை மாற்ற கோரிக்கை

அப்போது பொதுமக்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அதாவது, மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல் அமீன், குழித்துறை ரெயில் நிலையத்தை மார்த்தாண்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார்.

அதற்கு பதில் அளித்த அதிகாரிகள், அதற்கு நீங்கள் மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதை கலெக்டர் மாநில அரசுக்கு பரிந்துரை செய்து மாநில அரசு ரெயில்வேக்கு கடிதம் எழுதினால் உடனே பெயர் மாற்றம் செய்யப்படும் என பதிலளித்தார்.

மேலும் குழித்துறை ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வசதிக்காக நகரும் படிக்கட்டு அமைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இதுபோன்ற வசதி ஏற்படுத்தப்படும். இல்லையென்றால் எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் முன்வந்து நிதி ஒதுக்கலாம். அல்லது தனியார் அமைப்பினர் முன்வரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story