கொடிகாத்த குமரன் பெயர் சூட்ட வேண்டும்
திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு கொடிகாத்த குமரன் பெயர் சூட்ட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
அ.தி.மு.க.வினர் மனு
அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் திருப்பூர் வடக்கு தொகுதி விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொடிகாத்த குமரன் பெயர்
திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற திருப்பூர் மாமன்ற கூட்டத்தில் பழைய பஸ் நிலையத்துக்கு கலைஞர் கருணாநிதி பஸ் நிலையம் என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பஸ் நிலையம் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அடிக்கல் நாட்டி பணிகள் நடக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அந்த பஸ் நிலையத்துக்கு தியாகி திருப்பூர் குமரன் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது. உயிர் பிரியும் வரை கையில் தேசியக்கொடி ஏந்திய திருப்பூரின் பெருமையை இந்திய தேசம் எங்கும் கொண்டு சேர்த்த சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் பெயரை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
நிகழ்ச்சியின் போது மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், பட்டுலிங்கம், கருணாகரன், திலகர்நகர் சுப்பு, அரிகரசுதன், மகேஷ்ராம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், வக்கீல் அணி மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்டவர்கள் உடன் வந்தனர்.
பாரபட்சம் காட்டக்கூடாது
இதுபோல் 42-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரும், எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி, அ.தி.மு.க. கவுன்சிலர்களும் மாநகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மாமன்றத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 18 பேர் உள்ளோம். எங்களுக்கு உரிய முன்னுரிமை கொடுத்து மாமன்ற கூட்ட அரங்கில் இடமளிக்க வேண்டும். அதில் பாரபட்சம் காட்டக்கூடாது. எதிர்க்கட்சிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
சொத்துவரி உயர்வுக்கு எந்தெந்த கட்சியில் எத்தனை பேர் ஆட்சேபனை தெரிவித்தனர் என்பதை பதிவு செய்து மாநகராட்சி நிர்வாகம், சொத்துவரி உயர்வுக்கு ஆதரவு தெரிவித்தவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.