போதைக்காக மாத்திரைகள் விற்பனையா? :குமரி மாவட்ட மருந்து கடைகளில் போலீசார் திடீர் ஆய்வு


போதைக்காக மாத்திரைகள் விற்பனையா? :குமரி மாவட்ட மருந்து கடைகளில் போலீசார் திடீர் ஆய்வு
x

போதைக்காக மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என குமரி மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் போலீசார் திடீரென ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

போதைக்காக மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என குமரி மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் போலீசார் திடீரென ஆய்வு செய்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போலீஸ் அதிகாரிக்கு புகார்

குமரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு உள்ளிட்டவை முடக்கப்படுவதாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாலும் தற்போது கஞ்சா விற்பனை குறைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் போதை பொருட்கள் கிடைக்காததால் மருத்துவச்சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் போதைக்காக மாத்திரைகள் மற்றும் டானிக் போன்றவற்றை இளைஞர்கள் வாங்கி செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

மருந்து கடைகளில் ஆய்வு

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளில் ஆய்வு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் போதை பொருள் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் அனு, கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர், வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று மாநகருக்குட்பட்ட வடசேரி, கோட்டார், செட்டிகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மருந்து கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது மருந்துக்கடை உரிமையாளர்களிடம், மருத்துவச்சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்கக்கூடாது. மீறி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய டாக்டரின் கையொப்பம் உடைய மருத்துவச்சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

மார்த்தாண்டம்-குளச்சல்

இதேபோல் குமரி மாவட்ட மருந்து ஆய்வாளர் ஸ்ரீரேகா தலைமையில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் அடங்கிய குழுவினர் மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள ஆங்கில மருந்து கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது மருந்து சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரைகளும், குழந்தைகளுக்கு உரிய மருந்துகளும் யாருக்கும் வழங்கக் கூடாது என்றனர்.

மேலும் குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வின் ஜோஸ்லின், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு, காமராஜர் பஸ் நிலையம், காந்தி சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் போதைக்காக மாத்திரை, ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர். மாவட்டம் முழுவதும் மருந்து கடைகளில் போலீசார் திடீரென சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story