குமரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்


குமரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பருவமழை பொய்த்ததால் குமரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பருவமழை பொய்த்ததால் குமரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாகா்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கை, குறைகளை பட்டியலிட்டு பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சிற்றாறு பட்டணங்கால்வாய் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையும் அந்த பகுதிகளில் தலைவிரித்தாடுகிறது. நிலத்தடி நீர்மட்டம் உப்பாக மாறக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே சிற்றாறு பட்டணங்கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் அலட்சியம்

நெல்லை மாவட்டம் ராதாபுரத்திற்கு தண்ணீர் வழங்கி விட்டு குமரி மாவட்டத்தை புறக்கணிப்பது நியாயமா?. கால்வாய்களை தூர்வாரும் பணி எப்போது தொடங்கும்?. இந்த பிரச்சினைக்கு விவசாயிகள் வீதியில் வந்து போராடவும் தயங்க மாட்டார்கள். அந்த அளவிற்கு கொதித்து போய் உள்ளோம்.

பேச்சிப்பாறை அணையை தூர்வார வேண்டும். பேச்சிப்பாறை அணையில் 7 அடி தண்ணீர் இருக்கும் போதே தண்ணீர் வழங்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது அணையில் 40 அடி தண்ணீர் இருந்த பிறகு கூட சிற்றாறு பட்டணங்கால்வாய்க்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணமாகும். தோவாளை கால்வாயில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டதற்கு அதிகாரிகள் அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதால் தான் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

குமரியை வறட்சி மாவட்டமாக...

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி வருகிறது. மோட்டார் மூலம் தண்ணீரை பாய்ச்சி நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது. எனவே நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும். மாவட்டத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் பாதிப்பை அரசுக்கு கொண்டு சென்று குமரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று தருவதற்கு கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை

இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஜோதிபாசு கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டது. சிற்றாறு பட்டணங்கால்வாயில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தற்போது 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இன்னும் 20 நாட்களுக்குள் பணிகள் முடிவடைந்ததும் செப்டம்பர் 15-ந் தேதிக்கு பிறகு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது உள்ள தண்ணீரை வைத்து 20 நாட்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடியும். விவசாயிகள் ஏற்கனவே செய்த பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். சில இடங்களில் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதிக்கு பிறகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மட்டுமே தற்போது பயிர்கள் கருகும் சூழலில் உள்ளது.

வாக்குவாதம்

இரணியல் ரெயில்வே பாலத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தோவாளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விட்டனர். அந்த பகுதியில் தண்ணீரை அடைத்து விட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நாளைக்குள் (அதாவது இன்று) பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரி விளக்கம் அளித்த போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த சமயத்தில் அவர்கள் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story