குமரி ராணுவ வீரர் அபூர்வ நோய் தாக்கி சாவு
தக்கலை:
பிரதமரின் தனி பாதுகாப்பு படை பயிற்சியில் இருந்த குமரி ராணுவ வீரர் அபூர்வ நோய் தாக்கி பரிதாபமாக இறந்தார். அவருடைய உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
ராணுவ வீரர்
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் ஜெகதீஸ் (வயது 34). இவர் 2008-ல் மத்திய துணை ராணுவ படையில் சேர்ந்தார். இவருடைய மனைவி சந்தியா (30), மகன் ஆதித்யா (4). தற்போது சந்தியா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு வீரராக பணியாற்றி வந்த ஜெகதீஸ் பிரதமரின் தனி சிறப்பு பாதுகாப்பு படை பிரிவிற்கு சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
அபூர்வ நோய் தாக்கி சாவு
இதற்காக டெல்லியில் 6 மாத பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி பயிற்சியில் இருந்த போது ஜெகதீசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே அங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் உடல்நிலை தேறவில்லை. பின்னர் டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உடலை பரிசோதனை செய்ததில் அவருக்கு அபூர்வ நோய் தாக்கிய அதிர்ச்சி தகவல் தெரிந்தது.
அதாவது ஜி.பி.எஸ். என்கிற நோய் தாக்கியுள்ளது. இந்த நோயால் ஜெகதீஸின் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டது. எனினும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றுமுன்தினம் காலை 7 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
விமானத்தில் உடல் வருகை
இந்த சோகமான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்ததும் 7 மாத கர்ப்பிணியான அவரது மனைவி சந்தியா கதறி துடித்தார். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இதற்கிடையே இறந்த ராணுவ வீரரின் உடல் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனத்தில் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. வரும் வழியில் துணை ராணுவ வீரர்களின் அமைப்பான குமரி ஜவான்ஸ் வீரர்கள் 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக வந்தனர்.
சொந்த ஊரில் தகனம்
தொடர்ந்து சொந்த ஊரான கிருஷ்ணபுரத்தில் சமுதாய சுடுகாட்டில் வைத்து இறுதி சடங்குகள் நடந்தது. அப்போது துணை ராணுவ படை இன்ஸ்பெக்டர் புஸ்பன் தலைமையில் ஜெகதீஸ் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
மேலும் ஜெகதீஸ் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை அவரது மனைவி சந்தியாவிடம் இன்ஸ்பெக்டர் புஸ்பன் ஒப்படைத்தார். அப்போது சிறப்பு பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மதிவாணன், விலவூர் பேரூராட்சி தலைவர் பில்கான், முன்னாள் ராணுவ படை வீரர்கள் என ஏராளமானோர் இருந்தனர்.
ராணுவ வீரர் ஜெகதீஸ் அபூர்வ நோய் தாக்கி இறந்த சம்பவம் குமரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.