குமரி ராணுவ வீரர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலி
மராட்டிய மாநிலத்தில் குமரியை சேர்ந்த ராணுவ வீரர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
குலசேகரம்:
மராட்டிய மாநிலத்தில் குமரியை சேர்ந்த ராணுவ வீரர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ராணுவ வீரர் பலி
குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரை வியாலிவிளையை சேர்ந்தவர் முருகன், தொழிலாளி. இவருடைய மகன் விஜய் (வயது 24). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றினார்.
கடந்த 4-ந் தேதி விஜய் சொந்த ஊருக்கு வருவதற்காக ரெயிலில் புறப்பட்டார். நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டம் பத்ராவதி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது விஜய் ரெயிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்ததாகவும், அவரது உடல் பத்ராவதி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது.
இதை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதனை தொடர்ந்து விஜய்யின் அண்ணனும், ராணுவ வீரருமான விஷ்ணு பத்ராவதிக்கு புறப்பட்டு சென்றார்.
உடல் இன்று வருகை
இந்தநிலையில் விஜய்யின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) திருவனந்தபுரம் வழியாக சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.
சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்த போது ராணுவ வீரர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.