சிறப்பு யாகத்துடன் நிறைவு பெற்ற கும்பாபிஷேக மண்டல பூஜை
பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடுகளுடன் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு பெற்றது. இதில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
மண்டல பூஜை
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில், கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடந்ததால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வந்தது. அதன்படி தினமும் உச்சிக்காலத்தில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மண்டல பூஜையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இதனால் திருவிழாவைப்போல் கூட்டம் அலைமோதியது.
1,008 சங்காபிஷேகம்
இந்நிலையில் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் கோவில் கார்த்திகை மண்டபத்தில் விநாயகர் பூஜை, பிரதான கலசம் வைத்து சிறப்பு யாகம், புண்ணியாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, கலசபூஜை, சங்கு பூஜை நடைபெற்றது.
2-வது நாளாக நேற்று காலை சிறப்பு யாகம், பூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசம் மேளதாளம் முழங்க உட்பிரகாரம் வலம் வந்தது. பின்னர் உச்சிக்கால பூஜையில் சுவாமிக்கு கலசநீரால் சிறப்பு அபிஷேகம், 1,008 சங்காபிஷேகம் நடந்தது. பூஜை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அமைச்சர் அர.சக்கரபாணி
மண்டல பூஜை நிறைவு நாளில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் ராஜசேகரன், சுப்பிரமணியன், மணிமாறன், சத்யா, கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடா்ந்து கோவில் மண்டபத்தில் கும்பாபிஷேக பணிக்கு உதவிய உபயதாரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது கோவில் சார்பில் அவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.