திருச்சி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மலைக்கோட்டை, செப்.8-
திருச்சி மேல சிந்தாமணியில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்றது. இப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அன்று காவிரி ஆற்றில் அய்யாளம்மன் கோவில் படித்துறையில் இருந்து தீர்த்தக்குடம் புறப்பட்டு கோவிலுக்கு வந்தடைந்தது. பின்னர் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 4-ம் கால யாகசாலை பூஜைநடைபெற்றது. பின்னர் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் (கடம்) ஊர்வலமாக வந்து பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 11.20 மணிக்கு கோவிலை சுற்றி கருடன் வட்டமிட ஸ்ரீகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரக் கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "ஓம் சக்தி - பராசக்தி" என பக்தி முழக்கமிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதன்பின் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் மேல சிந்தாமணி பகுதி முன்னாள் கவுன்சிலர் வழக்கறிஞர் ஜெ.செந்தில்நாதன், ஜெ.சிவக்குமார், ரியல் எஸ்டேட் அதிபர் டி.கே.எஸ்.விஜயகுமார் மற்றும் உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.