முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
கூடலூரில் பக்தர்கள் கரகோஷத்துடன் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கூடலூர்,
கூடலூரில் பக்தர்கள் கரகோஷத்துடன் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முத்துமாரியம்மன் கோவில்
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆனை செத்தக்கொல்லி இளங்கோ நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து பூஜை, கொடியேற்றுதல் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தீர்த்தக் குடங்களுடன் முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இரவு 9 மணிக்கு கலச பூஜையும், முதல் கால யாக பூஜையும் நடந்தது. இரவு 12 மணிக்கு முத்துமாரியம்மன் எந்திர ஸ்தாபனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பால விநாயகர், முருகன், துர்க்கை, வழி பிள்ளையார் மற்றும் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணிக்கு லட்சுமி கணபதி ஹோமம், அஷ்டலட்சுமி, சகஸ்ரநாமம் மஹா யாகம் நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து புனித தீர்த்தங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்தனர்.
மகா கும்பாபிஷேகம்
முன்னதாக ஏராளமான பக்தர்கள் ராமர் கோவிலில் இருந்து சீர்வரிசை தட்டுகள் எடுத்தவாறு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் காலை 9.30 மணிக்கு பக்தர்களின் கரகோஷத்துடன் முத்துமாரியம்மன் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதேபோல் பரிவார தெய்வங்களின் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் 10 மணிக்கு முத்துமாரியம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு 9 மணி வரை பல்வேறு விசேஷ பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.