கடலூர் வண்டிப்பாளையம்சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கடலூர் வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் வண்டிப்பாளையத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி இக்கோவிலில் பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
முன்னதாக கடந்த 27-ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, கோ, கஜ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இதையடுத்து நவக்கிரக ஹோமம், தன பூஜை, மூர்த்தி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரகணம், தீபாராதனை நடைபெற்றது.
யாக பூஜை
தொடர்ந்து முதல் கால யாக பூஜை, யாத்ரா தானம், ரக்ஷா பந்தனம், கும்பம் யாக சாலை, யாக மண்டப பூஜை, வேதிகா, யாக பூஜை, ஹோமம் நடந்தது. அதன்பிறகு 2-ம் கால யாக பூஜை, முதல் படை வீடு அலங்காரம், பூர்ணாகுதி, தீபாராதனை, 3-ம் கால யாக பூஜை, 4-ம் கால யாக பூஜை, 5-ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, மாலையில் 7-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், திரவி யாகுதி, பூர்ணாகுதி நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடை பெற்றது. இதையொட்டி காலை 8-ம் கால யாக பூஜை, கும்ப, யாக பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது.
கும்பாபிஷேகம்
இதில் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசம் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வல மாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஊர் முக்கியஸ்தர்களும் ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து கோவில் ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக பாலவிநாயகர், ஏழை மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதி கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோவிலை சுற்றி திரண்டு நின்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. புனித நீர் பட்டதும் பக்தர்கள் பரவசத்துடன் சாமி கும்பிட்டனர்.
நேற்று தைப்பூசம் என்பதாலும் விழாவில் வண்டிப்பாளையம் மட்டுமின்றி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கலச பூஜை, மகா அபிஷேகம், மாலையில் திருக்கல்யாண உற்சவம், சாமி வீதி உலா நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை செங்குந்தமரபினர், விழாக்குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.