விஸ்வநாதர், அய்யனார், விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம்


விஸ்வநாதர், அய்யனார், விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகம்
x

காட்டுமன்னார்கோவில் அருகே விஸ்வநாதர், அய்யனார் மற்றும் விநாயகர் ஆகிய 3 கோவில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

கும்பாபிஷேக விழா

காட்டுமன்னார்கோவில் அருகே பூ விழுந்த நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார், கற்பக விநாயகர், விசாலாட்சி அம்பிகை உடனுறை விஸ்வநாதர் ஆகிய 3 கோவில்களின் கும்பாபிஷேக விழா கடந்த 18-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனையுடன் தொடங்கியது.

மறுநாள் மாலை முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. இதில் திருக்கயிலாய பரம்பரை தருமையாதினம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மட இளைய சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் நேற்று முன்தினம் காலை கணபதி பூஜை, விஷேச சந்தி, 2-வது கால யாக பூஜை, மாலையில் 3-வது கால யாக பூஜை, வடுகபூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

கலசங்கள் புறப்பாடு

விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணியளவில் கணபதி பூஜை, 4-வது கால யாக பூஜை, காலை 6 மணிக்கு செல்லியம்மன், பூரணி, புஷ்கலா சமேத அய்யனார் மற்றும் கிராம தேவதைகளுக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று சென்னை ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனர் எஸ் வெங்கடேசன், ஞானாம்பிகை வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் கோவில் விமான கலசங்களுக்கும், 9 மணிக்கு கற்பக வினாயகர், விசாலாட்சி அம்பிகை சமேத விஸ்வநாதர் கோவில் விமான கலசங்களுக்கும், பின்னர் மூலவர் சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேட்டி-சேலை

விழாவில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் வி.ஆர்.செந்தில்குமார், இயக்குனர் வி.ஆர்.ராமு, ராதா செல்வி, முருகானந்தம், பத்மாவதி, சிவகுமார், கிராம தலைவர் பத்மநாபன், ஆசிரியர் ஞானம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரிபுரசுந்தரி, ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம்செய்தனர். சிவாச்சாரியார்கள் பண்ணப்பட்டு எஸ்.நடேசகுருக்கள், மாங்காடு பரமசிவ குருக்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் கும்பாபிஷேகம் செய்தனர்.

மேலும் இந்த விழாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு நிறுவனம் சார்பில் இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


Next Story